தஞ்சை மே.18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பொதுமக்களைக் காக்கும் பணியில், தன்னார்வலர்களாக கட்சியினர் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வழிகாட்டுதலின்படி, கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திங்கள்கிழமை முதல், களத்தில்  இறங்கி தன்னார்வலர்களாக முன்களப்பணியாளர்களுக்கும்,

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், கனிவாக இன்முகத்துடன் சேவை செய்து வருகின்றனர். 

கட்சியினரின் இச் செயலுக்கு பொதுமக்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் என பலதரப்பினரும் மனம் திறந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனாப் பெருந்தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு வார்டு குறித்தும், சளிப்பரிசோதனை செய்யும் இடம், நோயாளிகளுக்கான வார்டு, சி.டி ஸ்கேன் எடுக்கும் இடம், மருந்து, மாத்திரை வாங்கும் இடம், என எதுவும் தெரியாமல் அல்லாடுகின்றனர்.

படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், பாமர மக்களின் நிலை சொல்லி மாளாது. எவர் துணையும் இன்றி சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உதவும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னார்வலர்கள் குழு, தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, பொதுமக்களுக்கு பல்வேறு

வகையிலும் உதவி வருகின்றனர்.

மொத்தம் 12 பேர் கொண்ட இக்குழுவில் கோ.அரவிந்த்சாமி, துரை.ஏசுராஜா, பு.அருண்குமார், வே.ராஜாராம், அ.சிரில் இமான், ச.மணிகண்டன், வி.அஜய், செ.சந்தோஷ், ஜி.சந்தோஷ், மு.சிலம்பு, பி.செந்தில்குமார், ந.சிவகுரு ஆகியோர் உள்ளனர். இவர்களில் தினசரி 10 பேர், இரு குழுக்களாக பிரிந்து, காலை 6 முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என இரண்டு ஷிப்ட்டுகளாகச் செயல்பட்டு வருகின்றனர். 

இக்குழுவினர் நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி, ஸ்ட்ரெச்சர், அவர்களை சாதாரண வார்டு, கொரோனா வார்டுகளில் அனுமதிப்பது, வீல்-சேரில் வைத்து தள்ளி செல்லுதல், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுத் தருதல், பரிசோதனை செய்யும் இடங்களுக்கு செல்லுதல், பரிசோதனை முடிவுகளை பெற்றுத் தருதல், பரிசோதனை மற்றும் மருந்து பெறும் இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வைத்தல், நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் ஆகிய பணிகளைச் செய்வதுடன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கும் உதவியாக இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து இக்குழுவைச் சேர்ந்த சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ந.சிவகுரு ஆகியோர் கூறுகையில்,

“மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவைச் சந்தித்து, தன்னார்வலர்களாக கட்சியினர் செயல்படுவோம். அதற்கு அனுமதி வேண்டும் எனக் கேட்டோம். மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று, எங்கள் பணியைத் தொடங்கி உள்ளோம். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார், கண்காணிப்பாளர் டாக்டர் மருதுதுரை ஆகியோர் ஒத்துழைப்புடன் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்” என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னார்வலர்கள் சேவையை மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பாராட்டி உள்ளதோடு, பொதுமக்கள், நோயாளிகளின் உறவினர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
பூதலூர்