தஞ்சாவூர், டிச.01- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாடு தழுவிய கண்டன நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக் குழு சார்பில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

‘லவ் ஜிகாத், பசு பாதுகாப்பு என்னும் பெயரால் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி தாக்குதல், உணவு உரிமையை பறிக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், திரிபுரா மாநிலத்தில் மசூதிகள், வீடுகள், கடைகள் இடிப்பு, பள்ளிவாசல்களில் பாங்கு அழைப்பை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்தம் செய்வது போன்ற வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும், சமூக ஊடகங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள்,  தேவாலயங்கள் மீதான தாக்குதல், மதமாற்றம் செய்வதாக கூறி, கிறிஸ்தவ பழங்குடி பகுதி மக்களிடம்  பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள், பாஸ்டர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், அப்பாவி சிறுபான்மை மக்களை பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பதை கண்டித்தும், குற்ற வழக்குகள் நிரூபிக்கப்படாத உடனே விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, சிறுபான்மை மக்கள் நலக்குழு  என்.குருசாமி, ஹெச்.அப்துல் நசீர், ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜாகிர் உசேன் கலந்து கொண்டு பேசினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், 
சிஎன்ஐ ஏ.ஜஸ்டின் சில்வஸ்டர், ஜ.இ.ஹிந்த் பி.முகமது நாசர் புகாரி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

சிபிஎம் மாநகருக்குழு உறுப்பினர்கள் சி.ராஜன், எம்.கோஸ்கனி, எம்.ராஜன், இ.வசந்தி, கே.அன்பு, யு.காதர் உசேன், பி.அருண்குமார், ஆர்.வின்சிலா ராணி, ஜி.பைந்தமிழ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/