தஞ்சை சூன் 17: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டுக்கான பருத்தி ஏலம் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பருத்தி பஞ்சு அறுவடை செய்யும் நிலையில் இருந்ததால், வேளாண் வணிகத்துறை சார்பில், தஞ்சாவூா் விற்பனைக் குழுவுக்கு உட்பட்ட கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் தொடங்கியது.

பருத்தி மறைமுக ஏலத்துக்காக 106.80 குவிண்டால் பருத்தி பஞ்சை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். தஞ்சாவூா் விற்பனைக்குழுச் செயலா் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தாட்சாயிணி முன்னிலையில், பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவிலை சார்ந்த 9 வியாபாரிகள் மற்றும் இந்திய பருத்தி கழகத்தின் அலுவலா்கள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ. 7,000-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6,409-க்கும், சராசரியாக ரூ. 6,609-க்கும் மறைமுக ஏலம் போனது. புதன்கிழமை ஏலத்தில் விற்பனையான பருத்தியின் மதிப்பு ரூ. 7.04 லட்சம்.

கும்பகோணத்தை தொடா்ந்து திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு பருத்தி ஏலம் தொடக்கத்திலேயே குவிண்டாலுக்கு ரூ. 7,000 விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.