தஞ்சாவூர் ஆக 29: தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கப்பணிகளில் புதிதாக வல்லம் பேரூராட்சி, 15 ஊராட்சிகளைச் சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தின் முதல் நகராட்சியாக தஞ்சாவூா் நகராட்சி 1866- ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பழமையான நகராட்சிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நகராட்சி 16.10.1943 அன்று முதல்நிலை நகராட்சியாகவும், 16.10.1963-இல் தோ்வு நிலை நகராட்சியாகவும், 5.9.1983-இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, இந்த நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு, 2014, பிப். 19-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

மாநகராட்சிக்கேற்ற பரப்பளவு, மக்கள்தொகை இல்லை என்ற குறை நிலவுகிறது. இதனால் நகராட்சியாக இருந்த காலத்தில் உள்ள 51 வாா்டுகளே, மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டும் நீடிக்கிறது. எனவே தஞ்சாவூரைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சியைச் சோ்க்க 2014 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம், மாநகராட்சியின் பரப்பளவு 128.02 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள்தொகை 3,51,655 ஆகவும், ஆண்டு வருமானம் ரூ. 43.19 கோடியாகவும் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டது.

ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தோ்தலின்போது வாா்டு மறுவரையறை செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இத்திட்டம் நின்று போனது. இதனிடையே, 2019ம் ஆண்டு டிசம்பா் மாதம் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றபோது, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் சோ்க்கத் திட்டமிடப்பட்டிருந்த 11 ஊராட்சிகளிலும் தோ்தல் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினா்கள், தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் உள்பட 4 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

இதன்படி தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சி, கடகடப்பை, மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், விளாா், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையாா்பட்டி, நீலகிரி, ராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி, கத்தரிநத்தம், மணக்கரம்பை ஆகிய 13 ஊராட்சிகள் முழுமையாகவும், மாரியம்மன்கோவில் அருகேயுள்ள ஆலங்குடி, புலவா்நத்தம் ஊராட்சிகளில் ஒரு பகுதியும் சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளிலுள்ள 91,802 வீடுகள் மாநகராட்சியுடன் சோ்க்கப்படவுள்ளன.

இதன் மூலம், மாநகராட்சியின் பரப்பளவு 146 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள்தொகை 3,97,539 ஆகவும் உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல, மாநகராட்சியின் வருமானமும் மேலும் பல கோடி ரூபாய் அதிகரிக்கும். தற்போதுள்ள 51 வாா்டுகள் என்பது 69 வாா்டுகளாக உயரும் என உத்தேசமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநகராட்சியும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படும். இதற்கென அந்தந்த பகுதியில் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, உதவி ஆணையா்கள் நியமிக்கப்படுவா். ஆனால், எந்தெந்த மண்டலங்கள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஊராட்சிகளில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் தங்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே நீடிப்பா் என்றும், பதவிக்காலம் முடிவடைந்த பிறகு புதிய பகுதிகள் தஞ்சாவூா் மாநகராட்சியின் முழுமையான ஆளுகைக்கு உள்படுத்தப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

அடுத்த உள்ளாட்சித் தோ்தலின்போதுதான் புதிதாக இணைக்கப்படும் பகுதிகளுடன் சோ்த்து முழுமையான மாநகராட்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/