கும்பகோணம் கொரோனா தொற்று கும்பகோாணம் பகுதியில் அதிகரிப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் போதிய மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால் தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாகிறது.

கும்பகோணம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முதலாக கும்பகோணத்தில் உள்ள ஒருவருக்கு தான் கடந்தாண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

இதையடுத்து மாவட்டத்திலேயே அதிக அளவாக கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தான் தொற்று அதிகம் ஏற்பட்டது. ஊரடங்கு சமயத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில், கடந்த மாதம் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் பரவிய தொற்று, அடுத்தத்து மூன்று பள்ளிகள், இரண்டு கல்லூரியிலும் பரவி பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

கும்பகோணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருவதால் தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அதன்படி கும்பகோணம் காரனேசன் நகராட்சி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர். அதே போல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், இரண்டாம்கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் ஏராளமானோர் வந்ததால் மருத்துவமனை நிரம்பி காணப்பட்டது.  

ஆனால் போதிய மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், பொதுமக்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வெகுநேரம் காத்திருந்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் மருத்துவ செவிலியர்கள் வந்து தடுப்பூசிபோடும் பணியில் ஈடுபட்டனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், மருத்துவமனையில் கூடுதல் மருத்துவப்பணியாளர்களை நியமிக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்
தஞ்சை.