தஞ்சாவூர் டிச 02: தமிழக அரசு உத்தரவின்படி தஞ்சை அருகே வல்லத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடந்தது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ரமேஷ்குமார் வழிகாட்டுதலில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில் வல்லம் வட்டாரத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதைடுத்து கொரோனா பெரும் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக தகுதிவாய்ந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். இதை வலியுறுத்தி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வல்லத்தில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், குளிர்பான கடைகள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடை, உணவகம், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்கள், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல்டோஸ், 2ம் டோஸ் செலுத்தி உள்ளனரா? என்ற விபரத்தை சுகாதாரத்துறை சார்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை 2 நாட்களுக்குள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வழங்கும் பணியை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன், சுகாதார மேற்பார்வையாளர் சிங்கராவேலு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் மேற்கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/