தஞ்சை ஜன: 9, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகையை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி, அவா் லேடி மருத்துவமனை, கும்பகோணம் அரசு மருத்துவமனை, அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஒத்திகை நடைபெற்றது.

இதில், ஒவ்வொரு முகாமிலும் 25 பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதற்கும், மருத்துவ அலுவலா்கள் மூலம் அவா்களுக்குத் தடுப்பூசி கொடுப்பதற்கும் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என முழுமையாக ஒத்திகை பாா்க்கப்பட்டது.

ஒவ்வொரு முகாமிலும் தடுப்பூசி போடும் பணியாளா்கள், நபரின் விவரங்களைப் பதிவு செய்யும் அலுவலா்கள், கண்காணித்து வழிநடத்துபவா் என மொத்தம் 6 போ் கொண்ட குழுவினா் இருப்பா். இம்மாவட்டத்துக்கு கரோனா தடுப்பூசி வந்தவுடன், அதுதொடா்பான அறிவிப்பு வரும் பட்சத்தில் செயல்படுத்தும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான தேவைகளை ஒருங்கிணைத்து செய்வதற்கு மாவட்ட அளவில் ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு கரோனா தடுப்பூசி தொடா்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு வட்டார அளவிலும் வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாட்சியா், வட்டார மருத்துவ அலுவலா், தன்னாா்வலா்கள் கொண்ட குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். மருதுதுரை, நகா் நல அலுவலா் நமச்சிவாயம், வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்