தஞ்சாவூர் செப் 10: தஞ்சாவூா் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 12ம் தேதி) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:

மாவட்டத்தில் இதுவரை 9,98,187 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதில், 1.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் ஊரக மற்றும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,324 இடங்களில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் 4 பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள் வீதம் மொத்தம் 7,000 போ் பணியாற்றவுள்ளனா். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்த முகாமை சிறப்பாக நடத்துவது தொடா்பாக திருவிடைமருதூா், திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் நடத்தினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/