தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூரில் 18 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கிராமத்தின் எல்லைகள் தடுப்புகளை கொண்டு அடைக்கப்பட்டது.

கும்பகோணம் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்னம்பூர் கிராமத்தில் ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததாகச் சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து இன்னம்பூரில் நேற்று முன்தினம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அங்கு வசிக்கும் பொதுமக்களுக்குக் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானதில், தோப்புத்தெரு, காந்தி நகர், வடக்குத் தெரு, மேலத்தெரு, பால்வாடித்தெரு, புளியம்பாடி காலனி ஆகிய தெருக்களைச் சேர்ந்த 18 பேருக்குக் கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

தொடர்ந்து தொற்று பாதித்தவர்கள் கோவிலாச்சேரியில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்தக் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இன்னம்பூர் கிராமத்துக்குச் சென்று வரும் சாலைகள் மூடப்பட்டு, அங்கு ஊரக வளர்ச்சி துறையினர், அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.