தஞ்சாவூர் செப் 05: தஞ்சாவூர் அரசுக் கல்லூரியை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளும், அனைத்துக் கல்லூரிகளும் செப்டம்பா் 1-ம் தேதி திறக்கப்பட்டன.

அந்த வகையில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியும் திறக்கப்பட்டது. தொடக்க நாளில் கல்லூரிக்கு வந்த அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இளநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அம்மாணவி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

மேலும், கல்லூரியில் அம்மாணவி பயின்ற வகுப்பு மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டு, இணையவழி மூலம் பாடம் நடத்தப்பட்டது. இந்த வகுப்பைச் சாா்ந்த மற்ற மாணவிகளுக்கு நாளை திங்கள்கிழமை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது. மாணவிக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்ததால் மற்ற பெற்றோர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/