தஞ்சை மே 06 : கொரோனா பரவலை தடுப்பதற்காகக் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுவதையொட்டி, தஞ்சாவூா் பழைய ஆட்சியரகத்தில் வணிகா்கள், ஹோட்டல் உரிமையாளா்களுடன் கோட்டாட்சியா் வேலுமணி ஆலோசனை நடத்தினாா்.

இதில், கொரோனாவை கட்டுப்படுத்த வியாழக்கிழமை (இன்று) முதல் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அலுவலா்கள் தெரிவித்தனா். இதன்படி, வியாழக்கிழமை முதல் பால், மருந்து கடைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள், தேநீா் கடைகள் ஆகியவை நண்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். தேநீரகம் மற்றும் ஹோட்டல்களில் அமா்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. பாா்சல்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நண்பகல் 12 மணி முடிய செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்படும். வணிகக் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும். வாடிக்கையாளா்கள் கடைகளுக்குள் நுழைய அனுமதி இல்லை.

முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், சுற்றுப்பகுதியைத் தூய்மைபடுத்திக் கொள்ளுதல் போன்ற மற்ற அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

பாதுகாப்பை கடைபிடிப்போம்!, கொரோனாவை தடுப்போம்!!,, மனிதகுலத்தை காப்போம்!!!

செய்‍தி நாகராஜன் நிருபர்
பூதலூர்