தஞ்சை மே 13: அட்சய திருதியை நாளையொட்டி கும்பகோணத்தில் நாளை நடக்க இருந்த 12 கருட சேவை வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கும்பகோணம் காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க செயலா் வெங்கட்ராமன் தெரிவித்திருப்பதாவது:

கும்பகோணத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய தெருவில் அட்சய திருதியை நாளில் 12 பெருமாள் கோயில்களிலிருந்து கருட வாகனத்தில் நம்பெருமாள்கள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வீதி உலா செல்லும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.

இதற்காக பெரிய தெருவில் அமைக்கப்படும் அலங்காரப் பந்தலில் 12 கருட சேவை உற்சவத்தை பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் நடைபெற்று வந்தது. இந்தாண்டு இந்த வைபவம் நாளை நடைபெறவிருந்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பொதுமக்கள் நலன் கருதியும், அரசின் முழுப் பொதுமுடக்கம் அமலில் உள்ளதாலும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.