தஞ்சை பிப்.02–
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையை கண்டித்தும், பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்கும் போக்கை கண்டித்து, ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கம், பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்கம், முதல்நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று மதியம் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்ஐசி பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை முற்றிலும் தனியார்மயமாக்கும் நோக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தியதைக் கண்டித்தும், ஐடிபிஐ வங்கி, ஏர் இந்தியா, பி.பி.சி.எல்.,நிறுவனம் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், தனியார் மயமாக்கும் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பை கண்டித்தும், முதல்நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க கோட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். லிகாய் மாநிலச் செயலாளர் ராஜா, பொது காப்பீட்டு ஊழியர் சங்க தலைவர் சத்தியநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். லிகாய் கோட்டத் தலைவர் தங்கமணி, கிளைச் செயலாளர் தேசிகன், பொருளாளர் ஜாக்குலின் உள்ளிட்ட ண200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க கோட்டச் செயலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை எல்ஐசி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க பட்டுக்கோட்டை கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். லிகாய் மாநிலச் செயல் தலைவர் பூவலிங்கம் கண்டன உரையாற்றினார். லிகாய் பட்டுக்கோட்டை கிளை செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பஞ்சாட்சரம், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பட்டுக்கோட்டை நிர்வாகி சிவகுமார், தஞ்சை கோட்ட இணைச் செயலாளர் இரா.விஜயகுமார் முதல் நிலை அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் வைரவன்,எல்ஐசி அலுவலர் இளங்கோ மற்றும் முகவர்கள் ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி : க.சசிகுமார், நிருபர்.
தஞ்சை