தஞ்சாவூர் நவ 11: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சம்பா, தாளடி நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மாவட்டத்தில் சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை காலை வரை இடைவெளியின்றி தொடர் மழை பெய்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் ஏறத்தாழ 17,500 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இவற்றில் பெரும்பாலும் அண்மையில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் வாய்க்கால்கள் முழுமையாகத் தூர் வாரப்படாமல் விடப்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்து, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பிரச்னை காரணமாக தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஏறத்தாழ 100 ஏக்கரில் அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும், தயார் நிலையில் இருந்த நாற்றங்கால்களும் மூழ்கியுள்ளன. வடிந்து செல்வதற்கு வழியில்லாததால், வரப்புக் கூட தெரியாத அளவுக்கு தண்ணீர் நிற்கின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து நடவு செய்யப்பட்ட பயிர்களை முழுமையாகக் காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்கின்றனர் விவசாயிகள்.
அப்பகுதியில் முதலைமுத்து வாரி என்கிற பேய்வாரி வாய்க்கால் முழுமையாகத் தூர் வாரப்படாததால், வாரியில் நீரோட்டம் தடைப்பட்டு, வழிந்து வயலுக்குள் தண்ணீர் புகுந்ததன் காரணமாக எங்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
தொடர் மழை பெய்யும்போதெல்லாம் இப்பிரச்னை ஏற்படுவதாகக் கூறும் விவசாயிகள் பேய் வாரி வாய்க்காலை முழுமையாகத் தூர் வார வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் மழை இல்லாததால், வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. தொடர்ந்து வியாழக்கிழமையும் மழை பெய்யாவிட்டால் தண்ணீர் வடிந்து செல்ல வாய்ப்பாக அமையும் என்றும், அதன் மூலம் பயிர்களைக் காப்பாற்றிவிடலாம் எனவும் வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

நாகராஜன் நிருபர்,
https://thanjai.today/