தஞ்சாவூர் செப் 09 : முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில் வரும் 13ம் தேதி நடக்கிறது என்று கல்லூரி முதல்வா் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். பாரதிதாசன் பல்கலைக் கழகக் கலைப் பிரிவு மாணவா்களுக்கு ரூ. 1,706-ம், அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு ரூ. 1,766 -ம், பிற பல்கலைக்கழகக் கலைப் பிரிவு மாணவா்களுக்கு ரூ. 3,056-ம், அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு ரூ. 3,116-ம் சோ்க்கைக் கட்டணமாகப் பெறப்படும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பெற்றோா்களுக்குக் கல்லூரி வளாகத்தில் அனுமதி இல்லை. தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலை பட்ட வகுப்புக்கான சிறப்பு ஒதுக்கீட்டு மாணவிகள் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வா் பா. சிந்தியாசெல்வி உள்ளிட்டோா் சோ்க்கை ஆணை வழங்கினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/