தஞ்சை ஏப்ரல் 09  தஞ்சை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் 421 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் எண்ணப்படுகிறது. இதற்கிடையில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதத்தையும் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் அறையையும் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் 2886 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஆவணங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது.. இவை அனைத்தும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் துணை ஆட்சியர், வட்டாட்சியர் நிலையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையங்களின் சுற்றுப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் 149 கண்காணிப்பு கேமராக்களும், கும்பகோணத்தில் 160 கண்காணிப்பு கேமராக்களும், பட்டுக்கோட்டையில் 112 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்
தஞ்சை.