ஆலத்தூர் மக்களின் கிராம சுயசார்பு தனிமைப்படுத்தல் முகாமுக்கு குவியும் பாராட்டுக்கள்!.

தஞ்சை சூன் ‍05: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலத்துாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்களுக்காக, தனிமைப்படுத்த மையம் ஏற்படுத்தி முன்மாதிரியாக திகழ்வதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையிலும், கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திலும் சிகிச்சை பெற்ற பிறகு வீடுகளில் தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். பெரும்பாலும் கிராமபுறங்களில், சிறிய அளவில் வீடுகள் உள்ளதாலும், கழிவறை வசதிகள் இல்லாததாலும் அக்கம்பக்கத்தில், நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதை உணர்ந்த பட்டுக்கோட்டை அருகே ஆலத்துார் கிராமத்தில், அரசு பள்ளியில், பஞ்சாயத்து தலைவர், வெளிநாடு வாழ் இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கிராம சுயசார்பு தனிமைப்படுத்தல் மையம் ஒன்றை, கலெக்டர் கோவிந்தராவிடம் அனுமதி பெற்று ஏற்படுத்தினர். கொரோனாவால் சிகிச்சை பெறுவர்களை தனிமைப்படுத்தி வைத்து கிராமத்தில் நோய் தொற்று பாதிப்பைக் குறைத்துள்ளனர். இதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திராவிடசெல்வன் கூறியதாவது; “கிராம சுயசார்பு தனிமைப்படுத்துதல் மையம் ஏற்படுத்தப்பட்டு, 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 5 பேர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மூன்று வேளை உணவு, குடிநீர் வசதி அளிக்கப்படுகிறது. அவ்வப்போது டாக்டர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தேவையான மருத்துவமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இளைஞர்களும், கிராம மக்களும் பெரியளவில் உதவியாக உள்ளனர் என்றார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்