தஞ்சை டிச.13- தனியார் நிறுவனத்தில் மாதாந்திர சேமிப்பு மற்றும் டெபாசிட் பணம் கட்டி முதிர்வடைந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுவனம் இழுத்தடித்து வருகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது தஞ்சையில் இயங்கி வரும் வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நலச்சங்க தலைவர் நாகராஜன், பொருளாளர் கவிஞானம், துணைத்தலைவர் சுந்தர்ராஜ், துணைச் செயலாளர் சந்திரன் ஆகியோர் தலைமையில் 300க்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
சென்னையை தலைமையிடமாக கொண்டு தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை மன்னார்குடி திருச்சிராப்பள்ளி நாகர்கோவில் ஆகிய இடங்களில் ஏசிஐஆர் வெல்த் டெவலப்பர்ஸ் பார்ம் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனத்தினர் நிலத்தின் மீது முதலீடு, இயற்கை விவசாயம் செய்து அந்த உணவுப் பொருளை ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டித் தருவதாகக் கூறி மாதத்தவணையாகவும், ஒரே மொத்த தவணையாகவும் பணம் செலுத்த கூறினர்.
இவ்வாறு செலுத்தப்படும் பணத்திற்கு ஐந்து வருடங்கள் முடிவில் வட்டியும் சேர்த்து தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மீது நம்பிக்கை வைத்து தஞ்சை மாவட்டத்தில் ஏராளமானோர் பணம் கட்டினர். பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் பணம் கட்டி முடித்த சிலருக்கு மட்டும் முதிர்வு தொகை வழங்கப்பட்டது.
அதற்கு பிறகு யாருக்கும் பணம் திரும்ப தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் தொடர்ந்து அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் தருவதாக கூறி கடந்த நான்கு வருடங்களாக இழுத்தடித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் பேர் ரூ.10 கோடிக்கு மேல் பணத்தை முதலீடு செய்துள்ளனர். எனவே நாங்கள் செலுத்திய தொகையை மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/