தஞ்சாவூர் அக்: 20-காவிரி டெல்டா உள்ளிட்ட தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும் மழை பாதிப்பால் சேதமடைந்த குருவை பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கிடுக! தமிழக அரசுக்கு பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.
திருவாரூர் அருகே மாவூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர்,பின்னவாசல் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் சேதம் அடைந்துள்ள குருவை பயிர்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில்,தென்மேற்கு பருவமழை பருவம்மாறி பெய்த பேய் மழையால் கன்னியாகுமரி நெல்லை தென்காசி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்திருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர்,தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர் மழையால் அழிந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் வர்தா புயல் துவங்கி கஜா புயல் வரையிலும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மின்வழி தடங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் சீரமைப்பு பணிகளில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற வகையில் மின் கம்பங்கள், இன்சுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள், மின்கடத்தும் கம்பிகள் உள்ளிட்டவை தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறு மழை பெய்தால் கூட கம்பங்கள் உடைந்து விடுவதும்,இன்சுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களில் தண்ணீர் பட்டாலே மின் கம்பிகள் அறுந்து விழுந்து விவசாயிகள், பொதுமக்கள்,மின் பணியாளர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் காலத்தில் வயல்வெளிகளில் இருந்த மின் வழிபாதைகள் அகற்றப்பட்டு சாலை வழியே மட்டுமே கொண்டு செல்லும் வகையில் மின் பாதைகள் புனரமைக்கப் பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் மற்றும் இன்சுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் தரக்குறைவான பொருட்களைக்கொண்டு சீரமைக்கப்பட்ட தால் சிறு மழை பெய்தால் கூட மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுவது தொடர்கிறது. இதனால் மிகப் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
இதுகுறித்து உயர்மட்ட குழுவை அமைத்து உடனடியாக ஆய்வு செய்து தரமான பொருட்களை கொண்டு மறு சீரமைப்பு செய்ய அவசரகால நடவடிக்கை எடுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையேல் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன். தமிழகம் முழுமையிலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மானிய திட்டத்தின் கீழ் கிணறுகள் அமைத்து இலவச மின் இணைப்பு கொடுப்பதற்காக சுமார் 1700 விவசாயிகள் 2018 முதல் காத்திருப்பில் உள்ளனர்.அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் நிலையில், விவசாயிகள் நலன் கருதி 2020-21ம் ஆண்டு சம்பா பாதிப்பிற்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதலமைச்சரை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம்.
அதே நேரத்தில் பல கிராமங்களில் ஜீரோ என அறிவிக்கப்பட்டு இழப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து விடுபட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்றார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் மாவட்ட துணைத்தலைவர் எம்.கோவிந்தராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட உழவர்கள் பலர் உடனிருந்தனர்.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/