தஞ்சை, ஜுன். 1: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாகனங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும் சேவை தொடங்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசியமான மளிகைப் பொருட்களை வாகனங்களில் வைத்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கும்பகோணம் நகரில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

கும்பகோணம் நகரில் உள்ள 45 வார்டுகளில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் மளிகை பொருட்கள் கிடைத்திடும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், நகராட்சி ஆணையர் லட்சுமி ஆகியோர் கொடியசைத்து வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள் விற்பனை சேவையை தொடங்கி வைத்தனர்.

கும்பகோணம் நகரில் நகராட்சி சார்பில் பத்து வாகனங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் மளிகை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்