தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் இயற்கை உரமாக தயார் செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் உரம் தயாரிப்பு இயந்திரக்கூடம், திடக்கழிவு உரக்கிடங்கு, மூலிகை தோட்டம், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி, மீன் வளர்ப்பு, மாடுகள் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிக்கும் பகுதி, வாத்துக்கள், ஈமு கோழி, கருப்பு கோழி வளர்ப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் வளம் மீட்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. அந்த வகையில் வல்லம் பேரூராட்சியில் தினமும் 4 முதல் 5 டன் குப்பைகள் சேர்கின்றன. குப்பைகளை பெறும் இடத்திலேயே தரம் பிரித்து வாங்கப்படுகிறது. முடியாத நிலையில் இங்கு கொண்டு வந்து தரம் பிரிக்கின்றனர். மக்கும் குப்பை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. பாட்டில்களை விற்பனை செய்துவிடுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் இயந்திரங்கள் வாயிலாக நொறுக்கப்பட்டு தார்ரோடு அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதிகளில் துர்நாற்றம் வீசும். சரியான முறையில் பராமரிக்க மாட்டார்கள் என்ற பார்வைதான் இருக்கும். ஆனால் வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் அதுபோன்ற கிடையாது. சிறப்பான முறையில் பராமரிக்கின்றனர். இங்கு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. பசுக்கள் வளர்க்கப்படுகிறது. அவற்றின் சாணம் இங்கு உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது. வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாநிலத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. இதேபோல் மற்ற பேரூராட்சிகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பிள்ளையார்பட்டி, நீலகிரி ஊராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இங்கு வந்து பார்வையிட்டு குப்பைகள் எவ்வாறு மாற்றம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது சிறந்த ஒரு செயல்விளக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், பிள்ளையார்பட்டி ஊராட்சித்லைவர் உதயக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் இராம.வெங்கடேசன், தனபால் மற்றும் பலர் செய்திருந்தனர்.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/