தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தது குறித்து விசாரித்த போது தனியார் பேருந்து நடத்துனர் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்த்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 2 தனியார் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் விதமாக பொது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடம் அபராதம் வசூல் செய்ய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொது இடங்களில் மாவட்ட ஆட்சியரும் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தஞ்சை கரந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு வந்த இரண்டு தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்தார். அதில் பயணிகள் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.

உடனே தனியார் பஸ்களின் டிரைவர்கள் நரசிம்மன். சங்கர், கண்டக்டர்கள் விஜயராஜன், மாரிமுத்து ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது கண்டக்டர் ஒருவர் அனைத்து பஸ்களிலும் தான் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வருகிறார்கள் என கலெக்டர் உடனே எதிர்த்து பேசினார். இதையடுத்து 2 பஸ்களின் சேவையையும், டிரைவர்கள் கண்டக்டர்கள் என 4 பேரின் உரிமத்தையும் 15 நாட்களுக்கு முடக்க வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

கலெக்டரின் உத்தரவின் பேரில் இரண்டு பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 4 பேரின் உரிமம் 15 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.toda