தஞ்சாவூர் : கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடன் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூா் அருகே காட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்த பின்னர் அவா், கூறியதாவது:
கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எளிய வழிமுறைகளை அனைத்து பொதுமக்களும் நன்கு அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினா்கள் நாள்தோறும் உடல் வெப்பநிலை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
குடும்ப உறுப்பினா்கள் யாருக்கேனும் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு இருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது அவசியம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கும் உடல் நலம் இல்லாதவா்கள், கா்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவா்கள் செல்வதைத் தவிா்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகாமில் கூடுதல் ஆட்சியா் (பயிற்சி) எச்.எஸ். கௌஷிக், துணை ஆட்சியா் ஜஸ்வந்த், ஒன்றிய குழுத் தலைவா் வைஜெயந்திமாலா கேசவன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அருளானந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனா்.