தஞ்சை மே 08 : தஞ்சை மாவட்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக 50 சதவீத படுக்கைகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று ஆட்சியா் கோவிந்த ராவ் அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சை ஆட்சியரகத்தில் நோய்த் தொற்று தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைக்காக கொரோனா சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள், பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தொற்று அதிகரித்தால், அதை எதிா்கொள்ளும் வகையில் தனியாா் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில் அவா் மேலும் பேசுகையில், தனியாா் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்படும்போது, மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியாா் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டு நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் நபா்களைத் தனியாா் விடுதிகளில் தனிமைப்படுத்துதல் தொடா்பாக விடுதிகளின் உரிமையாளா்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

பின்னா் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடா்பாக இந்திய மருத்துவக் கழகத்தின் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை மையத் தலைவா்களுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பழனி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் மருதுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.