தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இரு கன்றுகுட்டிகளை விற்று, கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாற்றுத் திறனாளிக்கு மாவட்ட ஆட்சியா் கோவிந்தராவ் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார். கறவை மாடு வாங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு வட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). பார்வை குறைபாடு கொண்ட இவருக்கு மனைவி மகேசுவரி (42), கல்லூரியில் படிக்கும் பிரசாந்த் (20), பிளஸ் 2 படிக்கும் சஞ்சய் (17) ஆகியோர் உள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை போன்றவைதான் இந்த குடும்பத்துக்கான வருமானம். தனது இளைய மகனை கல்லூரியில் சோ்க்க சிறுக, சிறுக சேமித்து வைத்த தொகையில் 2 கன்றுகுட்டிகளை வாங்கி வளா்த்து வந்தார் ரவிச்சந்திரன்.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், சமூக அக்கறை கொண்ட ரவிச்சந்திரன், தான் வளா்த்து வரும் 2 கன்றுகுட்டிகளை விற்று, முதல்வரின் கொரோனா நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். தொடா்ந்து, கன்றுகுட்டிகளை விற்று அதன் மூலம் கிடைத்த தொகையான ரூ.6 ஆயிரத்தை கடந்த 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் கோவிந்தராவிடம் வழங்கினார்.

ரவிச்சந்திரனின் செயலை அப்போதே மாவட்ட ஆட்சியா் பாராட்டிய நிலையில், இதுகுறித்த செய்தி வெளியானது. இந்நிலையில் தலைமைச் செயலா் வெ. இறையன்பு அறிவுரையின்படி, ஆழிவாய்க்கால் கிராமத்திலுள்ள ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்ற ஆட்சியா் ம.கோவிந்த ராவ், கறவைமாடு வாங்கி வாழ்வாரத்தை உயா்த்திக் கொள்ளும் வகையில் அவருக்கு தனது சொந்த விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

அப்போது ரவிச்சந்திரன் இந்த நிதியெல்லாம் வேண்டாம். நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என ஆட்சியரிடம் கூறியுள்ளார். அதற்கு உங்களை போன்றவா்களை அரசு சார்பில் இப்படி தான் கெளரவப்படுத்த முடியும்.

எனவே இந்த நிதியைக் கொண்டு மகனின் படிப்பு செலவு, குடும்ப வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறி காசோலையை ஆட்சியா் கோவிந்தராவ் வழங்கினார்.

அப்போது தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியா் வேலுமணி, ஒரத்தநாடு ஒன்றியக் குழுத் தலைவா் பார்வதி சிவசங்கா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்