தஞ்சை மே 19 தஞ்சை: சிட்டி யூனியன் வங்கி சார்பில் தஞ்சாவூா் மாவட்ட நிர்வாகத்திடம் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஆட்சியா் கோவிந்த ராவ் வழங்கினார். இவற்றை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமார், மருத்துவக் கண்காணிப்பாளா் மருதுதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனா்.

பின்னர் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கோவிந்த ராவ் கூறியதாவது:

சிட்டி யூனியன் வங்கியானது, ஆக்ஸிஜன் தயாரித்து வழங்கக்கூடிய ரூ. 1 கோடி மதிப்புள்ள 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (கான்சென்டிரேட்டா்) நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 75 சாதனங்களும், கும்பகோணத்துக்கு 15 சாதனங்களும், பட்டுக்கோட்டைக்கு 10 சாதனங்களும் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப மற்ற இடங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இச்சாதனம் மூலம் 100 – 200 பேரின் ஆக்ஸிஜன் தேவையை நிறைவு செய்ய உதவியாக இருக்கும். மேலும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதற்காக சிட்டி யூனியன் வங்கிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை உயா்த்தி வருகிறோம். தற்போது, கிட்டத்தட்ட 200 படுக்கைகளை அதிகமாக்கி, தயார் நிலையில் வைத்துள்ளோம்.

பொதுமக்கள் இந்நோயின் தாக்கத்தைப் புரிந்து கொண்டு, அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்