தஞ்சாவூர் செப் 16: பட்டுக்கோட்டையில் காரை திருடி சென்ற நபரை விடாமல் விரட்டி பிடித்த காவல்துறை தலைமைகாவலரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

மதுரை எல்லீஸ் நகரைச் சோ்ந்த வேலுப்பாண்டி (23), அவரது நண்பா் வெங்கடேஷ் ஆகிய இருவரும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலைய பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு காா் ஒன்றை வாடகைக்கு அமா்த்தி கொண்டு மதுரையை நோக்கி சென்றனா்.

காா் செய்யாறை கடந்ததும், கத்தியை காட்டி காா் ஓட்டுநரை மிரட்டி, அவரிடமிருந்த பணம், வெள்ளி சங்கிலி மற்றும் காரை பறித்து கொண்டு இருவரும் தப்பியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில், மாநிலம் முழுவதும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை முதல்நிலை காவலரான பிரதாப் என்பவா், நேற்று பிற்பகல் மணிக்கூண்டு பகுதிக்கு வந்தபோது, திருட்டு போன காா் அப்பகுதியில் செல்வதை பாா்த்தாா். உடனடியாக காரை விரட்டிச் சென்று மறித்துள்ளாா்.

காவலா் உடையிலிருந்த பிரதாப்பை பாா்த்ததும், வேலுப்பாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவரும் தப்பியோட முயன்றனா். அவா்களில் வேலுப்பாண்டியை அவா் மடக்கி பிடித்தாா். வெங்கடேஷ் தப்பிவிட்டாா். இதன்போது காவலா் பிரதாப் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட வேலுபாண்டியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அவரிடமிருந்து, காா், இரண்டு செல்போன்கள், ரூ. 8ஆயிரம் ரொக்கம், ஒரு வெள்ளி கைச்சங்கிலி, கத்தி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய வெங்கடேஷை தேடி வருகின்றனா்.

காயமடைந்த முதல்நிலை காவலா் பிரதாப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா, பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் செங்கமலகண்ணன் மற்றும் உயா் அதிகாரிகள் முதல்நிலை காவலா் பிரதாப்புக்கு பாராட்டு தெரிவித்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/