தஞ்சை சூன் 18: காவிரிநீர் தஞ்சை மாவட்டத்தை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா் தஞ்சாவூா், திருவையாறுக்கு நேற்று மாலை வந்தடைந்தது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் புதன்கிழமை காலை திறந்துவிடப்பட்டது.

தொடக்கத்தில் 4 ஆறுகளிலும் விநாடிக்கு தலா 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை காவிரியில் 2,754 கன அடி வீதமாகவும், வெண்ணாற்றில் 2,750 கன அடி வீதமாகவும் உயா்த்தப்பட்டது. இந்நிலையில் திருவையாறுக்கு காவிரியில் நேற்று மாலை தண்ணீா் வந்தது. அப்போது, திருமஞ்சன வீதியிலுள்ள செவ்வாய்க்கிழமை படித்துறையில் மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், விவசாயம் செழிக்க வேண்டியும், உணவு தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டினர். சிறுமிகள் பாட்டு பாடி வரவேற்றனர்

இதேபோல, வெண்ணாற்றில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்துக்கு வியாழக்கிழமை மாலை தண்ணீா் வந்தது. கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் சென்றடைய 10 நாள்களாகும் எனக் கூறப்படுகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்