தஞ்சை ‍சூன் 11: தஞ்சாவூர் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்திய நிலையில் வெளியே சுற்றியுள்ளார். பயிற்சி துணை ஆட்சியர் ஆய்வுக்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே கொ. வல்லுண்டாம்பட்டு ஊராட்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவ லெட்சுமணன்(28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லெட்சுமணனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கடந்த மே 30-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளித்தனர். பின்னர் கடந்த ஜூன் 3-ம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டு, 12-ம் தேதி வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி தஞ்சாவூர் மண்டல துணை வட்டாட்சியர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் லெட்சுமணன் வீட்டுக்கு சென்று அவரது கையில் மஞ்சள் பட்டையை கட்டிவிட்டு, அவரை தனிமையில் இருக்குமாறு அறிவுரை கூறியிருந்தனர்.

இதற்கிடையில் கிராம நிர்வாக அலுவலர் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து, உடல் நலம் விசாரித்த போது, லெட்சுமணன் வெளியே சுற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் பயிற்சி துணை ஆட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் செந்தில், வருவாய் ஆய்வாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் திடீரென, வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்கள் என வல்லுண்டாம்பட்டு பகுதியில் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது லெட்சுமணன் வீட்டில் இல்லாமல், வெளியே சுற்றியுள்ளார்.

அவரது வீட்டில் வெகுநேரம் காத்திருந்த அதிகாரிகள் லெட்சுமணனை செல்போன் மூலம் அழைத்து எச்சரித்தனர். மேலும், வீட்டில் இருந்தவர்களிடம் பயிற்சி துணை ஆட்சியர் கொரோனா குறித்த அறிவுரையை வழங்கினார்.

தொடர்ந்து துணை ஆட்சியர் உத்தரவின்படி, கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், வல்லம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லெட்சுமணன், கொரோனா விதிமுறை கடைபிடிக்காமல், பலருக்கும் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் வெளியே சுற்றி வருகிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்