தஞ்சாவூர் செப்: 11: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி தஞ்சையில் இன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சை மாநகர குழு சார்பில் ஒன்றிய மோடி அரசு பெண்களுக்கான 33 சத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த 6ஆம் தேதிதுவங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி தலைமை வகித்தார். பிரச்சார இயக்கத்தை சிபிஐ மாநகர செயலாளர் பி.கிருஸ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியன் முடித்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளன தஞ்சை மாநகர தலைவர் எஸ்.ராஜலட்சுமி, மாநகரச் செயலாளர் ஆர். பத்மாவதி நிர்வாகிகள் எம். பானுமதி கே.சாந்தி,சிபிஐ கட்டுப்பாட்டு குழுத்தலைவர் ஜி.கிருஷ்ணன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நாட்டில் ராணுவம், காவல்துறை, நீதிமன்றம், கல்வி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக, அதைவிட கூடுதலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சிகளில் பெண்களின் மகத்தான பங்கு அளப்பரியது. ஆண்களுக்கு சரிநிகராக பங்காற்றி வரும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது இன்னும் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது கடந்த 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அளவிலேயே நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு 2010-இல் மாநிலங்களவையில் மார்ச் 9ஆம் தேதியன்று 33 சதவீத ஒதுக்கீடு மசோதா நிறைவேற் றப்பட்டது, ஆனால் மக்களவையில் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டாமல், சட்டம் இயற்றுப்படாமல் உள்ளது.

தற்போது பல்வேறு சட்டங்களை ஜனநாயக முறைக்கு எதிராக நிறைவேற்றி வரும் ஒன்றிய அரசு பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்றும், பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி அமுல் படுத்தி வரும் தமிழ்நாடுஅரசு பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை தீர்மானமாக நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்றுபிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/