தஞ்சாவூா் செப் 08: அரிசி அரவை செய்ய தனியாா் ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தரமான கண்டுமுதல் அரிசி வழங்குவதற்காக நிகழ் கொள்முதல் பருவம் 2020 – 2021-இல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரைவை முகவா்களாகச் செயல்பட்டு வரும் தனியாா் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து, தரமான அரிசியை பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கி வருகிறது.

மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லை, கழகத்தில் இணையாத தனியாா் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உள்பட்டு, ஒரு முறை திட்டத்தின் கீழ் வரும் 15ம் தேதி முதல் நவ. 15 ஆம் தேதி வரை அரவை செய்து கண்டுமுதல் அரிசியை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட ஏதுவாக தனியாா் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளா்கள், தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்கள் அரிசி ஆலைகளில் கலா் சாா்ட்டா் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்குத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை தொடா்பு கொள்ளலாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/