தஞ்சை மே 19, தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, இதனை ஆட்சியர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய இரண்டு பேருந்துகள் தாமரை பன்னாட்டு பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேற்றுபார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அந்த இரண்டு பஸ்களும் பயன்பாட்டுக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆட்சியர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது,தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று அதிகமாக உள்ள இடங்களில் கட்டுப்படுத்த அங்கு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டால் அதிக தூரம் அலைய விடாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு, அதில் அவர்களை பரிசோதனை செய்து கண்காணித்து அவர்களுக்கு உரிய மருத்துவஆலோசனை வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே மருத்துவமனையில் தற்போது பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அங்கு தொற்று ஏற்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதித்து ஆலோசனை வழங்குகின்றனர். அவர்களுக்கு லேசான அறிகுறி இருந்து வீடுகளில் போதிய வசதி இருந்தால் அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், அங்கேயே அனுமதி வழங்கப்படுகிறது.

நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நமது மாவட்டத்தை பொருத்தவரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் ஆக்சிசன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகியவற்றை, நல்ல முறையில் செய்து மேலும் கூடுதலான ஆக்சிசன் வசதியுடன் கூடிய வடிக்கைகளை அமைப்பதற்கான தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில் ஆக்சிசன் தேவைப்படக்கூடிய நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி சார்பில் இரண்டு பேருந்துகளில் வழங்கியுள்ளனர், அதனை இரண்டு வகையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நம்மிடம் ஏற்கனவே 28 அரசு ஆம்புலன்ஸ்களும் 72 தனியார் ஆம்புலன்சுகளும் உள்ளன. அத்துடன் இந்த இரண்டு பேருந்துகளையும் பயன்படுத்தப்படும் என்றார்.

ஒவ்வொரு வாகனத்திலும் 108 ஆம்புலன்சு உழியர் ஒருவரும் நியமிக்க பட்டுள்ளார், எனவே அவர்களுடன் தொடர்பு கொண்டு நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு பயன்படுத்தி வருகிறோம் ஒருவேளை பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த இரண்டு பேருந்துகளை நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் மருத்துவமனையில் ஆக்சிசன் வசதி வழங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.