தஞ்சை மே.26 இந்திய ஒன்றிய பாஜக அரசு பதவியேற்ற மே 26 ஆம் தேதியை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைபிடிப்பது

என்று அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு வேண்டுகோளை ஏற்று, 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. 

கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 6 மாதத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக அரசின் தொழிலாளிகள், விவசாயிகள், பொதுமக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், இந்தியர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் வேலையிழந்து உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களோடு மாதம் ரூபாய் 7,500 வழங்க வேண்டும். 

போராடும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 3 வேளாண் விரோதச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். மின்சாரம், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். வேலையிழந்துள்ள கிராமப்புற குடும்பங்கள் பயனடையும் வகையில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட நாட்களை 200 நாட்கள் ஆகவும், தினக்கூலி 600 ஆகவும் உயர்த்த வேண்டும். 

பேரூராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். பொது வினியோகத் திட்டத்தில் நபருக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்றனர். 

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி ஆகியோர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர். இதேபோல் மாவட்டக்குழு அலுவலகம்  மற்றும் கட்சி நிர்வாகிகள் வீட்டில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு அலுவலகம், மற்றும் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மோரிஸ் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பூதலூர் தெற்கு ஒன்றியம் ராயமுண்டான்பட்டி, செங்கிப்பட்டி, புதுக்குடி, கோட்டரப்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டது. பூதலூர் 4 ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கம் சுந்தரவடிவேலு, பாலசுப்பிரமணியன், ராஜூ, கண்ணன், முருகானந்தம், முருகன், வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அம்மாப்பேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக்கோட்டையில் 10 இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. 

ஒரத்தநாடு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒக்கநாடு கீழையூரில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தென்னமநாடு தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார். 

பேராவூரணி ஒன்றியத்தில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், சேதுபாவாசத்திரம், மருங்கப்பள்ளம், ரெட்டவயல், மணக்காடு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

திருவையாறு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம், துணைத் தலைவர் ராமலிங்கம், கே.மதியழகன், எம்.பழனி அய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.