தஞ்சாவூர் அக் 29: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவுப்படி, விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் விதமாக, பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புனித இசபெல் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

குடிசை வீடுகள் உள்ள பகுதியில் ராக்கெட் வெடிகளை பற்ற வைக்கக் கூடாது. பெரியோர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உப்புத் தண்ணீரை ஊற்றக்கூடாது. தீக்காயத்தை அழுத்தி துடைக்கக் கூடாது.

காயத்தில் இங்க், எண்ணெய் ஆகியவற்றை தடவக்கூடாது. மருத்துவமனை, குழந்தைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இருக்கும் இடங்களிலும், மின்மாற்றி, பெட்ரோல் பங்க், கேஸ் குடோன் ஆகியவற்றின் அருகாமையிலும் வெடி வெடிக்க கூடாது. வெடி வெடிக்கும் போது பெரியவர்கள் துணையோடு, அருகில் தண்ணீர் வைத்துக் கொண்டு இறுக்கமான பருத்தி ஆடை உடுத்திக் கொண்டு, நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்தி வெட்டவெளியில் வெடி வெடிக்க வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.

தீபாவளியன்று யாருக்கும் எந்தத் தீங்கும் நேரா வண்ணம் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்” என தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை லீமா ரோஸ், தீயணைப்பு வீரர்கள் ஜானகிராமன், ஹரிஹரன், பாலச்சந்தர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/