தஞ்சை சூன் 25: தஞ்சை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை கிராமக் கணக்குகள் தணிக்கை செய்யப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிா்வாக அலுவலா்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக் கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பசலியில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழ் பசலி ஆண்டுக்கான கிராமக் கணக்குகள் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை தணிக்கை செய்யப்படவுள்ளது.

இந்த வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) குறிப்பிட்ட நாள்களில் காலை 10 மணிக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி நடைபெறும். மாவட்டத்தில் பொது இடங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும், பொதுமக்கள் கூட்டத்துக்கும் தடை ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறாமல் ஜூலை 31 ஆம் தேதி வரை இணையதள முகவரியிலோ அல்லது இ – சேவை மையம் மூலமாகவோ பெறப்படும்.

மேலும், வருவாய்த் தீா்வாய மனுக்களை பெறுவதற்கென ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் மனுதாரா்கள் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியுடன் மனுக்களை போடலாம். இந்த மனுக்கள் ஒவ்வொரு நாளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.