தஞ்சாவூர் அக் 18: தஞ்சையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கலைப்போட்டிகள் வரும் 25, 26-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சிவக்குமாா் தெரிவித்துள்ளதாவது:

பள்ளிகளில் இடைநிலை, மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், நமது பாரம்பரியக் கலைகளை இளம் தலைமுறையினரிடம் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை ஆகிய 4 பெருந்தலைப்புகளில் கலா உத்சவ் போட்டிகள் பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்படுகிறது.

இதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான கலா உத்சவ் போட்டியில் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், நுண்கலை உள்ளிட்ட பிரிவுகளில் ஒன்பது வகையான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படவுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி அளவிலான போட்டியை வரும் 20-ம் தேதிக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலும், அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலும் போட்டி நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2 மாணவிகள், ஒரு மாணவா் வெற்றி பெற்றனா். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/