டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 35 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கின்ற அபாயம் உடனடியாக இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு ஏஐடியூசி தொழிற்சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கை.

தஞ்சாவூர்:நவ,14- தஞ்சை, நாகை, திருவாரூர், மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 35 லட்சம் நெல் மூட்டைகள் பெருமழை காரணமாக பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் முளைத்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்தில் திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் இயக்கம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு மேல்பகுதியான கட்டக்குடி, வடுவூர் வடபாதி, காரைக்கோட்டை,வடுவூர் புதுக் கோட்டை ,மேல நெம்மலி உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15,000 மூட்டைகள் வரை தேங்கி அந்தப் பகுதிகள் மூட்டைகளாகவே காட்சியளிக்கின்றன.

மூட்டைகள் தேக்கம் ஏற்படுகின்ற இழப்பு கொள்முதல் பணியாளர்கள் மீதோ அல்லது சேமிப்பு நிலையங்களில் பணிபுரிபவர்கள் மீதோ சுமத்தப்படும் நியாயமற்ற நடவடிக்கை தொடர்கிறது. தற்போது ரயில் மூலமும் சாலை வழியாகவும் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூட்டைகளை அரைவைக்கு எடுத்து அரைத்து அரிசியாக ஒப்படைக்கிற பொறுப்பிலுள்ள நெல் அரவை முகவர்கள் இதுபோன்ற காலங்களில் ஒத்துழைப்பு கொடுத்து தேங்கியுள்ள குருவை நெல்லை எடுத்து அவர்களுடைய கிடங்குகளில் வைத்து அரைத்து அரிசியாக்கி நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உதவுகின்ற கடமையை செய்ய வேண்டும்.

அதனை விடுத்து லாபம் மட்டுமே பெறுகின்ற நோக்கில் ஈரம் இல்லாத தரமான நெல்லை மட்டுமே அரவைக்கு எடுப்போம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளையும், சேமிப்பு நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளையும் உடனடியாகவே அரைவை முகவருக்கு அனுப்பி வீணாகாமல் அரிசியாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அந்த அறிக்கையில் மாநில பொதுச்செயலாளர் சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/