தஞ்சாவூர் டிச 26: தஞ்சையில் பேரறிஞர் அண்ணா, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோர் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சையில் முதல்வர் வருகைக்கான பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் வரும் டிச.29ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சைக்கு வருகிறார். மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரது சிலைகளை திறந்துவைக்கிறார்.

பின்னர் மறுநாள் 30-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்பில் மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உத்தரவுகளையும் விழாவில் முதல்வர் வழங்குவார்.

தேர்தலுக்கு முன்பாகவே மக்களை தேடி வந்து மனுக்களை பெற்ற நிலையில், தற்போது முதல்வராக மக்களை தேடி வந்து நலத்திட்டங்களை வழங்குகிறார். முதல்வரின் வருகையை மிகுந்த ஆர்வத்துடன் தஞ்சாவூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி., ரவளிப்பிரியா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/