தஞ்சை பிப்.04-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முறையான ஓய்வுதியம் வழங்கப்படாத அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 7, 850 வழங்க வேண்டும். ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் திட்டத்தை கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும். 

முடக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கமுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். ஒரு மாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் குடும்பநல நிதி 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும், அனைத்து சிகிச்சைகளுக்கான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் சித்திக் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரின் குழு அறிக்கைகளை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இப் போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் இர.கலியமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் துவக்கி வைத்து பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். ராஜகோபாலன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். துணைத்தலைவர் ஆர்.தமிழ்மணி, பழ.அன்புமணி, பி. சமுதாக்கனி, இணைச் செயலாளர்கள் ஏ.வெங்கடேசன், என்.தெட்சிணாமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் த.சுத்தானந்தன், எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கோதண்டபாணி, ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கிராம உதவியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, அஞ்சல் ஊழியர் ஓய்வூதியர் சங்கம் ராமநாதன் 

ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் ஜி.பூபதி நன்றி கூறினார்.

செய்தி க,சசிகுமார், நிருபர்,
தஞ்சை.