தஞ்சை சூன் 08: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரத்தில் தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் தென்படுகிறது. இப்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில். கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் மாலதி தெரிவித்துள்ளதாவது: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னைமட்டையில் இலைகளின் கீழ் பரப்பில் சுருள் – சுருளாக வெண்மை நிறத்தில் முட்டைகளை ஈன்று வைத்திருக்கும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இவற்றின் உடலிலிருந்து சுரக்கும் ஒரு வகை தேன் போன்ற இனிப்பு திரவத்தினால் தென்னை இலைகளின் மேற்பரப்பு முழுவதும் கரும் பூசணம் (சூட்டி மோல்டு) பெருமளவில் வளர்ந்து பயிரின் இலை பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும்.

இதனால் ஒளிச்சேர்க்கை முற்றிலும் தடைபட்டு பயிர் வளர்ச்சி பெருமளவில் குன்றிவிடும். இப்பூச்சிகளால் இலைகளில் சாறு உறிஞ்சப்பட்டு இலைகள் மஞ்சள் நிறமடைந்து நாளடைவில் சருகுபோல் காய்ந்து விடும். இப்பூச்சிகள் தென்னை மட்டுமின்றி மா, வாழை, கொய்யா, சப்போட்டா, வெண்டை, காட்டாமணக்கு, சீத்தாபழம், எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களையும் தாக்குகிறது.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அழித்திட வேண்டும். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பால் உருவாகும் கருப்பு நிற பூசணத்தை மைதா மாவு கரைசல் கொண்டு தெளிப்பு செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் சுருள் வெள்ளை ஈக்களை கவர்ந்து இழுக்க ஏக்கருக்கு 5 எண்கள் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகளை வைக்க வேண்டும். என்கார்சியா எனும் முட்டை ஒட்டுண்ணியையும் க்ரைசோ பெர்லா என்னும் இறை விழுங்கியையும் கொண்டு இச்சுருள் வெள்ளை பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறாக ஒருங்கிணைந்த முறைகளை கையாளுவதால் மட்டுமே இச்சுருள் வெள்ளை பூச்சியை கட்டுப்படுத்த முடியும். மேலும் இதுதொடர்பான சந்தேகங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்