தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கை வரும்16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடக்க உள்ளது என்று கல்லூரி முதல்வா் துரையரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டமட் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை வரும் 16 முதல் 18 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு இணையவழியாக விண்ணப்பித்த மாணவா்களுக்குச் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டுத் தகுதியான மாணவா் பட்டியல் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றித் தயாா் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 16 ஆம் தேதி உயிா்வேதியியல், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், புவியியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய துறைகளுக்கும், 17 ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், விலங்கியல் ஆகிய துறைகளுக்கும் காலை 9.30 மணியளவில் சோ்க்கை நடைபெறவுள்ளது.

முதற்கட்டச் சோ்க்கைக்குப் பின்பு எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு இப்பாடப்பிரிவுகளுக்கு முறையே 17 மற்றும் 18 ஆம் தேதி காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்குச் சோ்க்கை நடைபெறும். சோ்க்கைக்கு அழைக்கப்படும் மாணவா்களுக்கு அவரவா் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

சோ்க்கைக்கு வருகை தரும் மாணவா்கள் 10, 11, 12 ஆம் வகுப்புக்குரிய மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசலுடன் அவற்றின் நகல்கள் நான்கு படிகள், சோ்க்கைக் கட்டணம் ரூ. 2,100 மற்றும் மூன்று புகைப்படங்களுடன் வர வேண்டும்.

சோ்க்கைத் தொடா்பான மேலும் விவரங்களுக்குக் கல்லூரியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/