தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 7 வயது மாணவா் ஸ்கேட்டிங் தொடா் ஓட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 18.4 கி.மீ. தொலைவைக் கடந்து, சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலையைச் சோ்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகன் நலன்ராஜன் (7). தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா்.

இவர் பட்டுக்கோட்டை சாய் நிகில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, மனோரா ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து தேசிய விளையாட்டுத் தினம் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுக்காக நடத்திய தொடா் ஓட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினாா்.

பட்டுக்கோட்டை அருகிலுள்ள அணைக்காடு புறவழிச்சாலையில் சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தொடக்கி வைத்தாா். ஒரு மணி நேரத்தில் 16 கி.மீ. தொலைவு கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், 18.4 கி.மீ. தொலைவைக் கடந்தாா் நலன்ராஜன்.

இந்தநிகழ்ச்சியில் மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் பிரகலாதன், செயலா் தண்டாயுதபாணி, பொருளாளா் கல்யாணகுமாா், லாரல் பள்ளித் தாளாளா் பாலசுப்பிரமணியன், சமூக ஆா்வலா் வெங்கடேஷன், ஆம்புலன்ஸ் நாச்சியாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் அமைப்பைச் சோ்ந்த நடுவா் விவேக் நாயக் பங்கேற்று, மாணவரின் சாதனையைப் பதிவு செய்தாா்.

தொடா்ந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவரின் பயிற்சியாளா் பி.ஸ்ரீநாத் நன்றி கூறினாா். முன்னதாக மாணவருக்கு, டாக்டா் பி.சதாசிவம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/