தஞ்சாவூர் செப் 21: தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மீண்டும் இன்று தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுததியது,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆனைவிழுந்தான் பகுதியையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு செப். 6 ஆம் தேதி வந்து பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டார்.

உடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மணிகண்டனை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் நடந்த விசாரணையின்போது மணிகண்டன் கூறுகையில், தான் பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் மற்றும் குடிநீர் பழுதுபார்ப்பு வேலை பார்த்தபோது, தன் மீது மோட்டார் காணாமல் போனது தொடர்பாகப் பொய் வழக்குப் பதிவு செய்து, பணியிலிருந்து விடுவித்தாகவும், இதனால், வாழ்வாதாரத்தை இழந்த தனக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது வேலை தர வேண்டும் என பல முறை கோரியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.

இதையடுத்து மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்த மணிகண்டன் பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். அங்கிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/