தஞ்சாவூர் சூலை 31: வீட்டில் இருந்தே மின்மோட்டாரை இயக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் அரவிந்த்‌. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் உடையவர்.

ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகின்றனர்.

மின்சாரம் எப்போது வரும் எப்பொழுது தடைப்படும் என தெரியாத நிலையில் வயலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து மின்சாரம் வரும்போது மின்மோட்டாரை இயக்குவதும், அதனை நிறுத்துவதும் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் ஒன்று.

இதற்காக ஒருவர் வயலிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் வரும் நேரத்தில் மின் மோட்டாரை இயக்க வேண்டும்.

இந்த சிரமத்தை போக்க பொறியியல் பட்டதாரியான அரவிந்த் செல்போன் மூலம் மின்மோட்டாரை இயக்குவதற்கும், அதேபோல இருமுனை மின்சாரம் மும்முனை மின்சாரம், தண்ணீர் எவ்வளவு தேவை என்பதை அறியும் வகையில் ஒரு செயலியை கண்டறிந்து அதனை ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அரவிந்த் கூறியதாவது: எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் நீண்ட நேரமாக மின்சாரத்திற்காக காத்திருந்து விவசாயம் செய்வதை அறிந்து தான் புதிய முறையில் சிந்தித்து இதனை உருவாக்கினேன்.

இதை வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் பொருத்திவிட்டால் சுலபமாக எந்த பகுதியில் இருக்கிறோமோ அதே பகுதியில் வேலை செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் பல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அரவிந்தின் இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்கு அரசு அங்கீகாரம் அளித்து, தயாரிப்புக்கு உதவி செய்தால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/