தஞ்சாவூர், நவ.13- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பரவலாக மழை பெய்து வந்தது. அதன் பின்னர் கனமழையாக கொட்டி வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மீண்டும் இன்று அதிகாலை லேசான அளவில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது.
தொடர் மழையால் தஞ்சை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தண்ணீர் தேங்கி சம்பா, தாளடி இளம்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. 2 நாட்களாக மழை இல்லை என்றாலும் தண்ணீர் வடிவதில் தாமதம் ஆகிறது. இதனால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகி விடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில் ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், பாலங்கள் உள்ளிட்ட பலவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சுற்றுசூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி 7 அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் பயிர் சேத விவரங்களை பார்வையிட இன்று காலை தஞ்சைக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்வது, பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், சாலைகளில் எங்காவது மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியை துரிதப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு அமைச்சர்கள், கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், வேளாண் துறை அதிகாரிகள் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிப்பு விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்து சேத விவரங்களை கணக்கெடுத்து குறித்து கொண்டனர்.
தொடர்ந்து மழையால் இடிந்து விழுந்த வீடுகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டு தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றுமாறு உத்தரவிட்டனர். வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பின்னர் திருவாரூர் மாவட்டத்துக்கு சென்று பயிர் பாதிப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த ஆய்வு முடிந்த பின்னர் கணக்கெடுக்கப்பட்ட பயிர் பாதிப்பு, இடிந்து விழுந்த வீடுகள் பாதிப்பு மற்றும் பிற பாதிப்பு விவரங்களை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சரிடம் வழங்க உள்ளனர்.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/