தஞ்சை சூன்: 27, தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் தச்சுத் தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி, இவர்களது ஒரே மகன் சபரிநாதன் (15) இவர் களத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து உள்ளார் தாய் ராஜேஸ்வரி சபரி நாதனுக்கு இரண்டு வயது இருக்கும் போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

சிறு வயதில் இருந்தே தந்தை நீலகண்டன், பாட்டி லட்சுமி (70) அரவணைப்பில் சபரிநாதன் வளர்த்து வந்தார். இந்த நிலையில் சபரிநாதனின் தந்தை நீலகண்டனுக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

சபரிநாதன் சிறுவன் என்பதாலும் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததாலும் கிராமத்தினரே நீலகண்டனின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர். பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் சபரிநாதன் தற்போது பாட்டியின் அரவணைப்பில் நிற்கதியாய் இருந்து வருகிறான்.

இதுகுறித்து சபரிநாதன் கூறியது தாயே சிறு வயதில் இறந்து விட்ட நிலையில் அப்பாவின் அரவணைப்பு பாட்டியின் உதவியில் வளர்ந்தேன். வயதான பாட்டி மட்டும் தான் உள்ளார் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற என் கனவு இப்போது கேள்விக்குறியாகி உள்ளது என்றார்.

சிறுவன் சபரிநாதன் வயதான அவரது பாட்டி இவர்கள் இரண்டு பேருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சபரிநாதன் தடையின்றி கல்விகற்க அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவினாலும் ஒரு சிறுவனின் எதிர்காலம் தடுமாறாமல் வளமாகும், என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தஞ்சை டுடே நமது நிருபர் மூலமாக சபரிநாதனின் தொடர்பு எண்ணை பெற்றுத்தர வேண்டியுள்ளோம் அதனை விரைவில் நமது இணைய இதழின் பக்கத்தில் வெளியிடுகின்றோம், சபரிநாதனுக்கு உதவ எண்ணுவோர் உதவலாம்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.