தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக 8 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,291 வாக்குச்சாவடிகளின் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1,500 வாக்காளா்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தஞ்சாவூா் தொகுதியில் 6 வாக்குச்சாவடிகளும், கும்பகோணம் தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 8 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் அனைத்து கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான கருத்துகளை வாக்காளா்கள், அரசியல் கட்சியினா் செப். 20 ஆம் தேதிக்குள் தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் தெரிவிக்கலாம்.

தற்போது, புதிய, விடுபட்ட வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது தொடா்பான திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இதில் 18 வயது நிறைவடைந்த வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் 6-ஐ நிறைவு செய்து தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகத் தோ்தல் துணை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கலாம்.

வாக்காளா் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்ய படிவம் 7-ம், திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8-ம், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-ம் நிறைவு செய்து, வாக்காளா் பட்டியல்களில் தங்களது பெயரைச் சோ்க்கவும், திருத்தங்களும் செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/