தஞ்சை, அக்.7- தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 கலைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள 8 கலைப்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள காட்சிப்பெட்டகத்தை கலெக்டர் .தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்துவைத்து பேசியதாவது:
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்தப் பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப்பகுதிக்கு ஏற்ப தனித்தனி பண்புகள் அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 195 இந்திய பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் உணவுசார்ந்த பொருட்கள் 57 ஆகும். தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் 8 கலைப் பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தஞ்சாவூர் வீணை, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியங்கள், கலைத்தட்டு, நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை வெண்கலச்சிலை, திருபுவனம் பட்டுபுடவை மற்றும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு ஆகியவை ஆகும்.
இத்தகைய கலைப் பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த கலைஞர்களை கொண்டு கலைநுட்பத்தோடு தயாரிக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், பயிற்சி துணைஆட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், காட்சிப்பெட்டகத்தை வடிவமைத்து ஒருங்கிணைப்பு செய்த மணிவண்ணன், வீணைக் கலைஞர் சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/