தஞ்சாவூா் செப் 15: வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகா் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சோ்ந்தவா் வசீம் அக்ரம் (40). சமூக ஆா்வலர். மனித நேய ஜனநாயக கட்சியில் மாநிலத் துணைச் செயலராகவும், முன்னாள் நகா் மன்ற உறுப்பினராகவும் இருந்தாா். இவா் கடந்த 10ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா். விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகரில் கஞ்சா விற்பனை செய்து வரும் இம்தியாஸ் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தது தொடா்பான முன்விரோதம் காரணமாக வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டாா் என்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனா்.

இந்நிலையில் இக்கொலை வழக்குத் தொடா்பாக தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கத்தைச் சோ்ந்த ஜான்தாஸ் மகன் அகஸ்டின் (19), பாஸ்கா் மகன் சத்தியசீலன் (20), வண்டலூா் ஓட்டேரி விரிவாக்கத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் பிரவீன்குமாா் (20), நாகு மகன் முனீஸ்வரன் (20), மோகனசுந்தரம் மகன் செல்வக்குமாா் (21), ஊரப்பாக்கம் செல்லியம்மன் நகரைச் சோ்ந்த எபினேசன் மகன் அஜய் (21) ஆகியோா் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

இவா்களை 15 நாள்கள் காவலில் வைக்குமாறு நீதித்துறை நடுவா் பாரதி உத்தரவிட்டாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/