தஞ்சாவூர் அக் 13: தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் 42 முகாம்கள் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை தஞ்சாவூர் எம் . பி. பழனிமாணிக்கம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,திருவையாறு எம்எல்ஏ., துரை சந்திரசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-
நோய்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் . நோய்கள் மக்களை தாக்காதவாறு தடுக்க வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். இதற்காக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கடந்த 29ம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார்.
அதனடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் மாத்தூர் கிராமத்தில் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது இம்முகாம் வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 14 வட்டாரங்களுக்கு 42 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் இதயநோய், நீரிழிவு நோய், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், புற்றுநோய் கண்டறிதல், காச நோய் மருத்துவம், சித்தா மற்றும் இந்திய மருத்துவம், கொரோனா தடுப்பூசி போடுதல் மற்றும் குழந்தைகள் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல் ஆகிய சேவைகள் நடைபெற்று வருகிறது.
மேலும், ரத்த ஹீமோகுளோபின் அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தத்தில் சர்க்கரை, ரத்தத்தில் கொழுப்பு, மலேரியா ரத்த தடவல், ஈசிஜி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், ஸ்கேன் அல்ட்ரா சோனோகிராம், கண்புரை ஆய்வு, செமி ஆட்டோ அனலைசர் பரிசோதனை, கொரோனா சளிப் பரிசோதனை, கொரோனா தடுப்பு அறிவுரைகள் விழிப்புணர்வு மற்றும் டெங்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள், விழிப்புணர்வு ஆகிய பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
முகாமில் சேவைகள் மற்றும் பரிசோதனைகள் அளிக்கப்பட்டு உயர் சிகிச்சை தேவைப்படுவோர் சிகிச்சைக்காக உரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 30க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் , 35 இதர பணியாளர்கள், 5 பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை வழங்கினர்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் அருளானந்த சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ் செல்வி, ஊராட்சி தலைவர் மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/